கீழ்த்தேசத்தில் பலஆண்டுகள் பயணம் செய்து, தனது சொந்தஊராகிய வெனிஸ் நகரத்துக்கு மார்க்கோ போலோ திரும்பிய போது, அவர் நண்பர்கள் அவருக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாய் நினைத்தார்கள். ஏனெனில், அவர் சொன்ன சம்பவங்கள் அப்படி இருந்தன.
“வெள்ளியும் பொன்னும் நிறைந்திருந்த நகரத்தைப் பார்த்தேன்” என்றார். “எரியும் கறுப்புக்கற்களைப் பார்த்தேன்” என்றார். அதுவரை ஐரோப்பியர் நிலக்கரியைப் பார்த்ததில்லை. “தீக்குள் எறிந்தாலும் எரியாத துணியைப் பார்த்தேன்” என்றார். அதுவரை ஐரோப்பியர் கல்நாரை (ஆஸ்பெஸ்டாஸ்) பார்த்ததில்லை. “மனிதனை விழுங்குமளவு பெரிய வாயை உடையதும் பத்துமுழ நீளமுமான பாம்பைப் பார்த்தேன்” என்றார். அதுவரை ஐரோப்பியர் முதலையைப் பார்த்ததில்லை. “தலையளவு பெரியதும், உள்ளே இனிப்பான பாலும் உடைய கொட்டையைப் பார்த்தேன்” என்றார். அதுவரை, ஐரோப்பியர் தேங்காயைப் பார்த்ததில்லை. ‘தரையிலிருந்து ஊறுவதும், எரியக் கூடியதுமான எண்ணெயைப் பார்த்தேன்” என்றார். அதுவரை, ஐரோப்பியர் கச்சா எண்ணெயைப் பார்த்ததில்லை. அவர் சொன்ன விவரங்களை மற்றவர்கள் எள்ளி நகையாடினார்கள்.
மார்க்கோபோலோ தன் மரணப்படுக்கையில் இருந்தபோது, அவரைப் பார்க்க வந்த பக்தியுள்ள ஒருநண்பர் அவரிடம், “நீங்கள் சொன்னவை எல்லாம் தவறு என்பதை நீங்கள் அறிக்கையிட்டு, மன்னிப்புப் பெறுங்கள்” என்றார். அப்போது மார்க்கோபோலோ, “நான் சொன்ன ஒவ்வொன்றும் உண்மை. சொல்லவேண்டுமானால், நான் பார்த்தவற்றில் பாதிகூட உங்களிடம் சொல்லவில்லை. அது தான் உண்மை ” என்றார்.
வேத எழுத்தாளர்களுக்கும் இதுபோன்ற அனுபவம் உண்டு. தரிசனத்தில் பரலோகத்தின் வனப்பு மிகு காட்சிகளைப் பார்த்தவர்கள் அதில் பாதிகூட சொன்னதில்லை. ஆனால், கேட்பவர்களால் அதை நம்பமுடியவில்லை. தேங்காயும் முதலையும் எப்படியிருக்கும் என்று கற்பனையில் யோசிக்க வேண்டியதாக உள்ளது. ஒன்று நிச்சயம். மேகத்தின்மேல் உட்கார்ந்து, யாழ்மீட்டுவது அல்ல பரலோகம். பரலோகம் அதைவிட மேலானது.