‘நான் ஏன் இயேசுவை நம்புகிறேன்?’ எனும் தலைப்பில் அந்தப் போதகர் பேசி முடித்துவிட்டு, தனது ஓய்வறைக்குத் திரும்பினார். அவரைப் பார்ப்பதற்காக ஓர் இளைஞர் வந்தார். அவர் அந்தப் போதகரிடம், “இன்று நீங்கள் பேசியது இனியதாக இருந்தது. ஆனால், கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் சொன்னவை அனைத்தும் உங்கள் வேதாகமத்தில் உள்ள செய்திகள் ஆகும். இயேசு என்று ஒருவர் உண்மையிலேயே இருந்திருந்தால், ஏன் வரலாற்றில் அவரைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை?” என்றுகேட்டார்.
“உங்கள் கேள்வி சரியானதே. வேதாகமம் மட்டுமல்ல, பிற வரலாற்றுப் புத்தகங்களும் இயேசுவைப் பற்றிச் சொல்லுகின்றன” என்றார் போதகர்.
முதலில் ஒரு புத்தகத்தை எடுத்தார். “இது இளைய ப்ளைனியின் கடிதங்கள்” எனும் புத்தக வரிசையில் 10 ஆவது தொகுப்பு. இதில் 97 ஆவது கடிதத்தைப் பாருங்கள். ரோமப் பேரரசன் ட்ராஜனுக்கு ப்ளைனி எழுதிய கடிதம் இது. கிறிஸ்தவர்கள் எனும் சமயப்பிரிவு வெகு வேகமாக வளர்ந்துவருகிறது என்றும், அவர்கள் தங்கள் தலைவராகிய கிறிஸ்துவைப் புகழ்ந்து பாமாலைகள் பாடுகிறார்கள் என்றும் அவர் எழுதியுள்ளார். ‘அவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது?’ என்று பேரரசரிடம் ஆலோசனை கேட்கிறார். இந்தக் கடிதம்எழுதப்பட்ட ஆண்டு கி.பி. 110. கிறிஸ்து என்று ஒருவர் இருந்தார் என்பதற்கான வரலாற்றுச் சான்று இது” என்றார் போதகர்.
இளைஞர் இதை எதிர்பார்க்கவில்லை; “வேறு ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
போதகர் இன்னொரு புத்தகத்தை எடுத்தார். “இதை எழுதியவர் பெயர் டாசிட்டஸ். இவரும் ப்ளைனியின் காலத்தவரே. இவர் தனது ‘வருடப் பதிவேடுகள் எனும் புத்தகவரிசையில் 15 ஆவதுபுத்தகத்தின் 44 ஆம் அத்தியாயத்தில் கிறிஸ்தவர்கள் மேல் பேரரசன் நீரோவுக்கு இருந்த வெறுப்பைப் பற்றிப் பேசுகிறார். ரோம் எரிந்தபோது, கிறிஸ்தவர்களை அவன் உபத்திரவப்படுத்தியதைப் பற்றியும் பேசுகிறார். கிறிஸ்தவர்கள் எனும் பெயரானது ‘கிறிஸ்து’ எனும் பெயரிலிருந்து வந்தது என்றும், பேரரசன் திபேரியுராயன் காலத்தில் இந்தக்கிறிஸ்துவை யூததேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்து என்பவன் கொலை செய்தான் என்றும் டாசிட்டஸ் குறிப்பிடுகிறார். வேதாகமம் சொல்கி இடங்கள், ஆட்கள், நிகழ்ச்சிகளுக்கு இவை ஒத்துப்போகின்றன” என்றார்.
இவை எல்லாம் வரலாற்றில் இருக்கின்றன என்பது இதுவரை எனக்குத்தெரியாது” என்று வியந்தார் அந்த இளைஞர்.
போதகர் தொடர்ந்தார்: “கி.மு.180 வாக்கில்ஸெல்சஸ் என்பவர் கிறிஸ்தவர்களைத் தாக்கி ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார். கிறிஸ்தவர்களை அலட்சியம் பண்ணக்கூடாத அளவுக்கு அவர்கள் அவர் காலத்தில் பெருகியிருந்தார்கள் என்பது தெரிகிறது. நான்கு சுவிசேஷப் புத்தகங்கள் கூட இவை போன்ற வரலாற்றுப் புத்தகங்களே. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது” என்று வலியுறுத்தினார்.
கிறிஸ்துவைப் பற்றி வரலாற்றுப்புத்தகங்களும் பேசுகின்றன எனும் தெளிவோடு அந்த இளைஞர் வீடு திரும்பினார்.